1150 அடி உயரத்தில் மிதக்கும் ஸ்டேடியம்.. உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை உருவாக்குகிறது சவூதி அரேபியா!
2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவூதி அரேபியாவின் அசத்தலான திட்டம் கால்பந்து விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வானில் மிதக்கும்’ உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை உருவாக்கி, உலக விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுத தயாராகி வருகிறது சவூதி அரேபியா. ‘நியோம் ஸ்கை ஸ்டேடியம்’ எனப்படும் உலகின் முதல் வானில் மிதக்கும் கால்பந்து மைதானம் கட்டப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘நியோம்’ எனப்படும் எதிர்கால நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகும் இந்த ஸ்டேடியம், மருபகுதியிலிருந்து 350 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த மைதானம், சூரிய மற்றும் காற்றால் இயங்கும் பசுமை மையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2034ம் ஆண்டு நடைபெறும் பீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கு போட்டிகள் நடத்தப்படும். 2027ல் பணிகள் தொடங்கி 2032ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான திட்டம் சவூதி அரேபியாவின் 2034 உலகக் கோப்பை வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15 ஸ்டேடியங்கள் அமைக்கும் பெரும் திட்டத்தை சவூதி அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது ரியாத்தில் உருவாகும் “கிங் சல்மான் சர்வதேச ஸ்டேடியம்”. இது முடிந்தபின் 92,760 பேரை அமர வைக்கும் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு அரங்காக இருக்கும்.
‘தி லைன்’ எனப்படும் எதிர்கால நகர அமைப்பின் பகுதியாக வடிவமைக்கப்படும் இந்த ஸ்கை ஸ்டேடியம், சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களால் இயங்கும் என ‘கன்ஸ்ட்ரக்ஷன் ரிவ்யூ’ இதழ் தெரிவித்துள்ளது. புயல், வெப்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை சமாளிக்க நவீன பொறியியல் தீர்வுகள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
🚨 Saudi Arabia is set to construct the world's first "sky stadium”. 🏟️
— Transfer News Live (@DeadlineDayLive) October 27, 2025
It will be suspended 1,150 feet above the ground, the venue is expected to open around 2032 and will host matches for the 2034 FIFA World Cup. 🇸🇦
pic.twitter.com/LO7WE3RIMV
இத்திட்டம் நிறைவேறினால் 2034 உலகக் கோப்பை போட்டிகளில் ரசிகர்கள் வானில் மிதக்கும் ஸ்டேடியத்தில் இருந்து ஆட்டத்தை ரசிக்க முடியும். இது உலக விளையாட்டு வரலாற்றில் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில நிபுணர்கள் இதன் கட்டுமான வலிமை குறித்து சந்தேகம் தெரிவித்தாலும், சவூதி அரசின் “விஷன் 2030” திட்டத்தின் கீழ் இது சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
