டாஸ்மாக் கடைகளில் தொடரும் செல்போன் திருட்டு... 4 பேர் கைது!
சென்னையில் டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மது பிரியர்களை குறிவைத்து தொடர்ச்சியாக செல்போன் திருட்டில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகலிவாக்கம், கிருஷ்ணவேணி நகரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் ஜீவா (48) கடந்த 1-ம் தேதி மாலை அண்ணாசாலை, ஜி.பி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கியபோது, தனது சட்டைப் பையில் வைத்திருந்த ஐ-போன் திருடப்பட்டுவிட்டது. அதிர்ச்சியடைந்த ஜீவா அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நால்வரை கண்டறிந்தனர். கைது செய்யப்பட்டவர்கள்: தண்டையார்பேட்டை, வீரா குட்டி தெருவைச் சேர்ந்த கிரிதரன் (24), நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் (24), அன்னை சத்யா நகர் ரஞ்சித் (33) மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்த வினோத் (27).
தலைமறைவாக இருந்த நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜீவாவின் ஐ-போன் உள்பட 10 செல்போன்கள் மீட்கப்பட்டு, குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், இந்த நால்வரும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று, நகரம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடியதாக தெரியவந்தது. மேலும், அவர்கள் அண்ணாசாலை, எழும்பூர், மண்ணடி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இதே போல செயல்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கிரிதரன் மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உட்பட 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; சரவணன் மீது 20 குற்ற வழக்குகள்; ரஞ்சித் மீது 3 குற்ற வழக்குகள்; வினோத் மீது சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், கிரிதரன் மற்றும் சரவணன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
