இளைஞரின் வயிற்றுக்குள் 20 ஆண்டுகளாக இருந்த தெர்மோமீட்டர்... சீனாவில் ஒரு மருத்துவ அதிசயம்!
சீனாவின் வென்சோ நகரைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தெர்மோமீட்டர் அகற்றப்பட்ட சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த வாலிபரை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது சிறுகுடல் பகுதியில் ஒரு நீண்ட பொருள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அவருக்கு 12 வயதாக இருக்கும்போது தற்செயலாக அந்தத் தெர்மோமீட்டரை விழுங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த ரகசியத்தை அவர் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இத்தனை காலம் அவரது வயிற்றுக்குள்ளேயே இருந்த அந்தப் பொருள் தற்போது குடல் சுவரை அழுத்தத் தொடங்கியதால் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் சுமார் 20 நிமிடங்கள் போராடி அந்தத் தெர்மோமீட்டரை உடையாமல் பத்திரமாக வெளியே எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

ஒருவேளை அந்தத் தெர்மோமீட்டர் வயிற்றுக்குள் உடைந்திருந்தால் அதிலிருந்த நச்சுத்தன்மை கொண்ட பாதரசம் உடல் முழுவதும் பரவி உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அவர் பூரண குணமடைந்து வரும் நிலையில் சீனாவில் இது போன்ற விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தெரியாமல் ஏதேனும் பொருட்களை விழுங்கிவிட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
