மகாளய அமாவாசையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அமாவாசை  பித்ரு

நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். அமாவாசை நாட்களில் இங்கு வருகை தரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து கோவிலில் சாமியை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

அமாவாசை

அதன்படி நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தும் வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடுவதற்கு வடக்கு கோபுர வாசலில் இருந்து கிழக்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடினார்கள். மேலும் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரம், மூன்றாம் பிரகாரம், கிழக்கு வாசல், தெற்கு கோபுர வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

ராமேஸ்வரம் அக்னி அமாவாசை

அதுபோல் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததை தொடர்ந்து கட்டண தரிசன முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருமே கட்டண தரிசன பாதை மற்றும் பொது தரிசன பாதையில் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஏராளமான திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?