திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்... தமிழகம் முழுவதும் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
பெளர்ணமி திருவண்ணாமலை பேருந்து

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வரும் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த தீபத் திருவிழா, சிவன் ஜோதிப் பிழம்பாக காட்சி தந்த தத்துவத்தை நினைவூட்டும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகும். அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும். அதற்கு முன்பாக, அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்; இதுவே மலைமேல் ஏற்றப்படும் மகா தீபத்திற்கான விதை தீபமாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவலம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து புனித யாத்திரைக்கு திரளும் பக்தர்களின் நெரிசலை சமாளிக்க 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் திருவண்ணாமலையில் அமைக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப மேலும் பேருந்து வசதியும் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளமான [www.tnstc.in](https://www.tnstc.in) அல்லது TNSTC மொபைல் செயலி மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

திருவண்ணாமலை

திருவிழா முக்கிய தேதிகள்:

கொடியேற்றம்: நவம்பர் 24 (திங்கள்) காலை

மகா தேரோட்டம்: டிசம்பர் 1 (திங்கள்) காலை

பரணி தீபம்: டிசம்பர் 3 (புதன்) அதிகாலை 4.00 மணி

மகா தீபம்: டிசம்பர் 3 (புதன்) மாலை 6.00 மணி

தெப்ப உற்சவம் ஆரம்பம்: டிசம்பர் 4 (வியாழன்) இரவு

பௌர்ணமி கிரிவலம் நாளில் இலட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும் நிலையில், இந்த ஆண்டும் பக்தர்கள் நெரிசல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்த அரசும், போக்குவரத்து துறையும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?