விஷு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்து பள்ளி மாணவர் பரிதாப பலி... பெரும் சோகம்!
கேரளாவில் விஷு பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோழிக்கோடு பகுதியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கொயிலாண்டி அருகே 16 வயது மாணவரான அத்வைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெடி வெடித்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய வெடியை எஃகு பாத்திரத்திற்கு அடியில் வைத்துப் பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக அந்தப் பாத்திரம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.

வெடியின் வேகத்தால் சிதறிய பாத்திரத்தின் ஒரு பகுதி அத்வைத்தின் நெஞ்சுப் பகுதியில் பலமாகத் தாக்கியது. இதில் ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டு அவருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்திருந்த அத்வைத், இணையதளங்களில் வரும் காணொளிகளைப் பார்த்து இது போன்ற ஆபத்தான முறையில் வெடி வெடிக்க முயன்றதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகை நாளில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
