பகீர் வீடியோ... துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர்
கடலூர் அருகே அதிமுக பிரமுகர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பொதுவெளியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு அருகே உள்ள குழந்தைகுப்பம் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகுப்பம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோர் ஒருபுறமும், அதிமுக ஒன்றிய செயலாளர் வினோத் மற்றொரு புறமும் கிராவல் குவாரி தொழில் செய்து வருகின்றனர். இந்த இரு தரப்பினரிடையே குவாரி நடத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் போட்டி நிலவி வந்தது. நேற்று வினோத் தனது ஆதரவாளர்களுடன் கிருஷ்ணமூர்த்தியின் குவாரி பகுதிக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் மகனான கோபால், தான் வைத்திருந்த லைசன்ஸ் பெற்ற கைத்துப்பாக்கியை (Pistol) எடுத்து வினோத் தரப்பினரை நோக்கி மிரட்டியுள்ளார். அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் இந்தப் பயங்கரக் காட்சியைப் படம்பிடித்தனர். அந்த வீடியோவில், கோபால் ஆவேசமாகத் துப்பாக்கியைக் கையில் ஏந்தி எதிர்தரப்பை நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்கு அன்றிப் பொதுவெளியில் பிறரை மிரட்டப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது: கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருக்கும் கோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் அதற்கான உரிமத்தைச் சரிபார்க்கும் பணிகளும், அதனைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிமுக உட்கட்சிப் பூசலால் நடுரோட்டில் துப்பாக்கி ஏந்தி மிரட்டிய சம்பவம் கடலூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
