“ஓட்டு இருந்தால் தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ!
தமிழக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஏற்படும் குழப்பங்கள் குறித்து தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், எஸ்.ஐ.ஆர். நடைமுறையின் விளைவுகள், வாக்குரிமையின் அவசியம் மற்றும் எதிர்வரும் தேர்தலில் இளைஞர்களின் பங்கு குறித்தும் அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
வீடியோவில் விஜய், “இந்திய அரசியல் சாசனம் வழங்கும் மிக முக்கிய உரிமைகளில் ஒன்றானது ஓட்டு போடுவதற்கான உரிமை. ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கே ஓட்டுரிமை ஒரு அடையாளம். ஆனால் தற்போதைய எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கும் படிவங்களை மக்கள் பூர்த்தி செய்து திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பிறகே தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிடும். அந்த பட்டியலில் நம் பெயர் இடம்பெறுவது கட்டாயம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்களுக்கு ஒரு மாதத்தில் படிவம் வழங்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுப்பியுள்ளார். வேலைக்குச் செல்வோருக்கும், தவெக உறுப்பினர்களுக்கும் படிவம் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படிவம் வழங்கப்படவில்லை என்றால் ஆன்லைனில் பூர்த்திசெய்யும் வசதி இருப்பதையும், அதை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் ஜென்-இசட் இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றுவார்கள்; அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க எந்த முயற்சியும் நடைபெறலாம் என்பதால் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“எதிர்வரும் தேர்தலில் நாம் யார், நம் பலம் என்ன என்பதை காட்டும் ஆயுதம் ஓட்டு. அது இருந்தால்தான் வெற்றிக்குப் பயணிக்க முடியும். தமிழ்நாடு வாக்குச்சாவடிகளில் திரண்டு நிற்க வேண்டும். தமிழ்நாடு தவெகவை தொடருகிறதா? அல்லது தவெகதான் தமிழ்நாட்டாக மாறுகிறதா? என்பதை ஓட்டு முடிவுசெய்யும். ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்,” என்று விஜய் கூறியுள்ளார். தவெக தோழர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், நல்லதே நடைபெறும் எனவும் அவர் வீடியோவில் உறுதியளித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
