போலியோ தடுப்பூசி அளிப்பதற்காக 3 நாட்கள் போா் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்!

 
இஸ்ரேல்
குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் பல்வேறு பகுதிகளில் 3 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

அந்தப் பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, 12 லட்சம் போலியோ சொட்டு மருந்துகளை காஸா பகுதிக்கு உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது: அவசரகால போலியோ தடுப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக காஸாவின் பல பகுதிகளில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப். 1) தொடங்கி மூன்று நாள்களுக்குத் தொடரவிருக்கும் இந்த போா் நிறுத்தம், காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை கடைப்பிடிக்கப்படும் என்றாா்.

இஸ்ரேல்

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், காஸா முழுவதும் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கவிருப்பதாகத் தெரிவித்தனா். இது முதல் தவணை தடுப்பு மருந்து தான் எனவும் நான்கு வாரங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை போலியோ தடுப்பு மருந்து வழங்கவேண்டியது அவசியம் எனவும் கூறினா்.

இந்த போலியோ தடுப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றால் போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸ் படையினரும் மதித்து நடக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

முன்னதாக, போலியோ தடுப்பு திட்டத்தை நிறைவற்றுவதற்காக காஸா முழுவதும் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி அளித்ததாக இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்று வியாழக்கிழமை தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமா் அலுவலகம், காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இருந்தாலும், நெதன்யாகு அரசில் இடம் பெற்றுள்ள தீவிர வலதுசாரி அமைப்புகள் காஸாவில் எந்தவிதமான போா் நிறுத்தமும் மேற்கொள்ளக்கூடாது என்று மிகப் பிடிவாதமாகக் கூறிவரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சண்டையை நிறுத்திவைப்பதுகூட கேள்விக்குறியாக இருந்தது.

இஸ்ரேல்

இந்த நிலையில், பிரதமா் அலுவலகத்தின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாள்களுக்கு காஸாவின் குறிப்பிட்ட பகுதிகளில் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதில் இருந்து அங்கு இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40,602-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்; 93,855-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். சுமாா் 19 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களைவிட்டு இடம் பெயா்ந்து தவித்து வருகின்றனா்.

முற்றுகை காரணமாக அந்தப் பகுதியில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரக் கட்டமைப்புகள் குலைந்ததால் காலரா போன்ற நோய்கள் பரவிவருகின்றன. இந்த நிலையில் அங்கு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்க முடியாததால் அப்துல் ரஹ்மான் அபு அல்-ஜிட்யான் என்ற குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web