தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஏன்?... வழக்கறிஞர் ராகேஷ் பரபரப்பு வாக்குமூலம்!
தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை தாக்க முயன்றது ஏன்? என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்தில் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியதும், வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வக்கீல் ராகேஷ் கிஷோர் திடீரென நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி, தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வக்கீல், ‘‘சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்’’ என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். ஆனால் இது குறித்து கொஞ்சமும் கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ‘‘இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது’’ என்று கூறிவிட்டு, தனது விசாரணையை தொடர்ந்தார்.
காலணி வீச முயன்ற வக்கீல் பெயர் ராகேஷ் கிஷோர் (71) என்பதும், டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட விசாரணையில், சனாதனத்தை அவமதிக்கும் வகையில் பேசியதால் நீதிபதியை தாக்க முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கஜூராஹோ கோவிலில் மீண்டும் விஷ்ணு சிலை வேண்டும் என்றால் கடவுளிடம் சென்று கேளுங்கள் என்று நீதிபதி கவாய் கூறியதால் அவரை தாக்க முயன்றேன் ராகேஷ் கிஷோர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
