திருவண்ணாமலையில் பெண்கள் வடம் பிடித்து தேர் வெள்ளோட்டம்!
திருவண்ணாமலையில் பார்வதி அம்மன் கோயில் தேர் முழுக்க முழுக்க பெண்களால் வடம் பிடித்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளின் தேர்களிலொன்றான பராசக்தி அம்மன் தேர் முழுமையாக புனரமைக்கப்பட்டு இன்று சிறப்பான வெள்ளோட்டமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து ஈடுபடும் பாரம்பரியம் தொடர்ந்து காக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 7 வரை நடைபெற உள்ளது. வரும் 24-ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். அதன் அடுத்தபடியாக 10 நாட்கள் நீளமான தீபத் திருவிழா கோவில் மாடவீதிகளில் உற்சாகமாக நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி தேரோட்டம் 30-ஆம் தேதி காலை நடைபெறும். அன்றைய தினம் விநாயகர் தேர் முதலில் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேர் நிலைக்கு வரும். பின்னர் முருகர் தேர், அருணாசலேஸ்வரர்–உண்ணாமுல்லை அம்மன் தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்களும் கோவில் மாடவீதிகளைச் சுற்றுவது வழக்கம்.

இதனையொட்டி, 150 டன் எடையுடன் 45.11 அடி உயரம் கொண்ட பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் செலவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. புதிய மரச் சக்கரங்கள், தேரின் ஐந்து நிலைப் பகுதி, உச்சி கூண்டு போன்றவை அனைத்தும் மறுவடிவமைக்கப்பட்டு அழகுற வர்ணம் பூசப்பட்டுள்ளன.
புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாடவீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடாக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

பரம்பரியத்தின் படி, அம்மன் தேரை பெண்களே வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற வெள்ளோட்டத்திலும் பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டு பக்தி முழக்கங்களுடன் தேர் இழுப்பில் ஈடுபட்டனர். தேர் அசைந்து ஆடியபடி மாடவீதிகளில் வலம் வந்தது. இதனால் சுற்றுவட்டார போக்குவரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டன. தேர் வெள்ளோட்டத்தை காண திருவண்ணாமலை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
