வாவ்... தமிழகத்தில் முதன் முறையாக வேதம் ஓதி பெண்களே நடத்தும் கும்பாபிஷேகம்!

 
தஞ்சாவூர்
 தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில்   நாளைய தினம் நடக்க போகும் நிகழ்வு இதுவரை யாரும் கண்டறியாதது.  ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழகத்தில் இந்து கோவில்களில்   பெண்கள் மாதவிலக்கு காலங்களில்   நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிலும் கருவறைக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்ற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையை பெரியார் மிகக்கடுமையாக எதிர்த்தார்.


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்றினார். சட்டம் இயற்றினாலும் அது நிறைவேற்ற முடியாமல் போன நிலையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உயிர் ஊட்டினார்.  அந்தவகையில் 2021ல், பெண் ஓதுவார் முதன் முறையாக கோவிலில் நியமனம் செய்யப்பட்டார். 2022ல் 3 பெண் அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.கடந்த வருடமும் 5 பெண் ஓதுவார்கள் உட்பட 15 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பெண் அர்ச்சகர்களும் அச்சரம் பிசகாமல் மந்திரங்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். கருவறைக்குள் சென்று மந்திரங்களையும், திருப்பாவையும் பாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம், தஞ்சை அருகே நாளைய தினம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு  உலகம் முழுவதும் பெண்களிடையே  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பில்  தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருப்புவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவாலைக்குமாரி, பதினெண் சித்தர்கள், மூட்டை சுவாமிகள் அருள்கூட கும்பாபிஷேகம் நாளை தினம் அதாவது செப்டம்பர் 6ம் தேதி காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது.  இந்நிகழ்வுக்கு ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் முன்னிலை வகிக்கிறார்.  கால யாகசாலை பூஜையில் தமிழ் வேத மந்திரங்களை பெண்களே ஓதி நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து  நாளை  நான்கு கால யாகசாலை பூஜைகளிலும் பெண்களே தமிழ் மந்திரங்கள் ஓத உள்ளனர்.  மேலும், நாளை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தையும் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று, அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உழவுத் தொழிலின் குறியீடாக இந்த பச்சை சேலையை பெண்கள் உடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.   சித்தர் முறைப்படியும், சித்தர் மரபுபடியும் இக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்  பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம் என்பதால், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web