தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
பாத்திமா பீவி

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியுமான பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் இன்று  காலமானார். அவருக்கு வயது 96.

கேரளத்தில், பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மீரா சாகிப்- கதீஜா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த பாத்திமா பீவி, அங்குள்ள கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். தனது சட்ட இளங்கலைப் பட்டப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.

1950-ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து, கேரளாவின் கீழ்நிலை நீதிமன்றங்களில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய பாத்திமா பீவி, நீதித்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். முன்சீப்பில் தொடங்கி, முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர், உயர் நீதிமன்ற நீதிபதி என சிறப்பாக செயல்பட்டார்.

Fathima Beevi

1989-ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றபின், 1989-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றார். இப்பணியிலிருந்து 1992ல் ஓய்வு பெற்றார். தனது பணிக்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், அடையாளமாகவும் பணியாற்றி உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்காலம் முடிந்தபின், தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கிலும் தடம் பதித்தார். 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றினார். 2001-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். 2001 ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான நள்ளிரவு கைது நடவடிக்கையின் போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர் பதவியில் இருந்த பாத்திமா பீவி நீக்கப்படார்.

Fathima Beevi

நீதிபதி பாத்திமா பீவியை கவுரவிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் ‘நீதிப் பாதையில் துணிச்சலான பெண்’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆர் பார்வதி தேவியின் திரைக்கதை, பிரியா ரவீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படத்தை கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தயாரித்தது. 30 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம், பாத்திமா பீவியின் நீதித்துறை பயணத்தை சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தது.

பின்னர் கேரளா சென்ற பாத்திமா பீவி, அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web