தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் நீக்கம்... நாடார் சங்கம் வருத்தம்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு மனோ தங்கராஜ் நீக்கப்பட்ட நிலையில், நாடார் சமுதாய பிரதிநிதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று தெக்ஷண மாற நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கலிதாசன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஏ.செல்வராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "நாடார் சமுதாய மக்கள் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முதலிடத்திலும், சென்னை உள்பட கொங்கு மண்டலங்களில் அதிக அளவிலும் வசித்தும், வணிகம் செய்தும், கல்வி நிறுவனங்களையும் சிறப்புடன் நடத்தி கல்வி வழங்கி வருகின்றனர்.
நாடார் சமுதாய ஓட்டுக்கள் இல்லாத சட்டமன்ற தொகுதிகளே தமிழகத்தில் இல்லை என்பது குறிப்படத்தக்கது. அனைத்து தொகுதிகளிலும் கணிசமான அளவில் நாடார் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாயத்தில் நாடார் சமுதாயமும் ஒன்று.
இதுவரை நாடார் சமுதாயத்திற்கு தமிழக அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் இருந்துவந்தது. இருப்பினும் தங்களது ஆட்சியில் நாடார் சமுதாயத்திற்கு 3 அமைச்சர் பதவியும் சபாநாயகர் பதவியும் வழங்கி கௌரவப்படுத்தினீர்கள். ஆதலால் எங்கள் சமுதாய மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து வெற்றிபெற உறுதுணையாக இருந்தார்கள். குமரி மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக மனோ தங்கராஜ் அவர்களை அமைச்சர் ஆக்கி அழகுபார்த்தீர்கள்.
அவரும் சிறப்புடன் செயல்பட்டு மக்கள்பணியாற்றி வந்தார். தற்போது திரு. T. மனோ தங்கராஜ் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி குமரி மாவட்ட மக்களின் பிரதிநிதியாக இல்லாமல் ஆக்கியது குமரி மக்கள் உள்பட ஒட்டு மொத்த நாடார் சமுதாய மக்களையும் வருத்தமடைய செய்துள்ளது. தங்கள் அரசின் மீது ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாண்புமிகு. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக எங்கள் சமுதாயத்திற்கு மீண்டும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சிறப்பிக்க திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பாகவும் அனைத்து நாடார் சமுதாய மக்கள் சார்பாகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!