1,00,000 வீடுகள் இருளில் மூழ்கியது... இங்கிலாந்தைக் கலங்கடித்த 'சந்திரா' புயல்!
இங்கிலாந்தை நிலைகுலையச் செய்துள்ள 'சந்திரா' புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தி விட்டு, கடந்து சென்றுள்ளது. கடந்த சில நாட்களாக அட்லாண்டிக் பெருங்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து 'சந்திரா' புயலாக மாறியது. இது நேற்று இரவு இங்கிலாந்தின் கடலோரப் பகுதிகளில் கரையைத் தொட்டது.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 90 முதல் 100 மைல் (சுமார் 160 கி.மீ) வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. பல மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதால், முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் இங்கிலாந்தின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததாலும், மின் மாற்றிகள் வெடித்ததாலும், இங்கிலாந்து முழுவதும் சுமார் 1,00,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளங்களில் மரங்கள் விழுந்ததால் லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வானிலை சூழலைக் குறிக்கிறது.
பிரிட்டிஷ் அரசு அவசரக்காலக் குழுவை கூட்டி நிலைமையை ஆய்வு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், காற்றின் வேகம் குறையாததால் பல இடங்களில் பணிகளைத் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
"மக்களின் பாதுகாப்பே எங்களது முதல் முன்னுரிமை. அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்," என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் இன்னும் சில மணி நேரங்கள் தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!