2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதம் - அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் தகவல்!
தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் 'டிட்வா' புயலின் தாக்கம் காரணமாக, சுமார் 2.11 லட்சம் ஏக்கர் (85,521 ஹெக்டேர்) பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபரில் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் இராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த முக்கிய விவரங்கள்:
'டிட்வா' புயலின் காரணமாக இன்று (டிச. 3) காலை வரை மழை விட்டுவிட்டுப் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை இந்தப் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, மாமல்லபுரத்தில் இருந்து தமிழகத்தின் உள்பகுதிகள் வழியாகச் செல்லக்கூடும். முதற்கட்டக் கணக்கின்படி, தமிழகத்தில் 2.11 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான (85,521 ஹெக்டேர்) பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிந்த பிறகு சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.
மழை பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 582 கால்நடைகள் இறந்துள்ளன மற்றும் 1,601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
மழை பாதிப்பை ஒட்டி மாநிலம் முழுவதும் மொத்தம் 54 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 3,534 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள பேரிடர் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!