பதுக்கி வைத்திருந்த 22 டன் உரமூட்டைகள் பறிமுதல்! திருச்சியில் வேளாண்துறை அதிகாரிகள் அதிரடி!

 

பருவமழை துவங்கி நடவுப்பணிகள் நடைபெறும் நிலையில் உரங்கள் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உர மூட்டைகள் பதுக்கல் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து வேளாண்துறை அதிகாரிகள் திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள ஒரு உரக்கடையில்; உரமூட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து துவரங்குறிச்சி வெள்ளைவிநாயகர் கோவில் அருகே உரக்கடை வைத்து நடத்தி வரும் முகமது இக்பால் என்பவரது கடையில் வேளாண்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதல் செய்த உரம் குறித்தும் விற்கப்படும் உரங்களின் அளவு மற்றும் இருப்பு வைத்திருக்கும் அளவு குறித்தும் அரசிடம் முறையான தகவல் அளிக்காமல் உர மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

உரமூட்டைகள் இருப்பு வைத்திருந்த அவரது குடோனில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்த போது 22 டன் எடையுள்ள யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது இக்பால் உர இருப்பு குறித்த தகவலை அரசிடம் தெரிவிக்காமல் அதிகளவிலான உர மூட்டைகளை குடோனில் பதுக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் குடோனை பூட்டி சீல் வைத்தனர்.

இந்நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் இன்று மாலை சம்பந்தப்பட்ட சீல் வைக்கப்பட்ட உர குடோனுக்குச் சென்று அங்கிருந்த 22 டன் எடையுள்ள உர மூட்டைகளை பறிமுதல் செய்து மூன்று லாரிகளில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான குடோனுக்கு எடுத்துச் சென்று அடுக்கி வைத்தனர். உரமூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை வேளாண் துறை அதிகாரிகள் மேற்கொண்டதாகவும் இதன் மதிப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையுடன் (மானியம் தவிர்த்து) ஒப்பிட்டால் ரூ. 1.50 லட்சம் எனவும் ஆனால் அரசு வழங்கும் மானியத்துடன் சேர்த்து பார்க்கும் போது இதன் சந்தை மதிப்பு ரூ10 லட்சம் எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் தொடர்பான அனைத்து தகவல்களை கூற வேளாண்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் துவரங்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!