காருக்குள் பெண் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு... மேம்பாலம் அருகே அதிர்ச்சி!
தலைநகர் டெல்லியில் மேம்பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் பெண் உட்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை பீராகர்ஹி மேம்பாலத்தின் ஓரத்தில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பெண் உட்பட 3 பேர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களைச் சோதித்தபோது, மூவரும் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
காரின் ஜன்னல்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருந்தன. முதற்கட்ட ஆய்வில், அவர்கள் மூவரும் கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காரின் ஏசி நீண்ட நேரம் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், கார் நின்று கொண்டிருந்ததால் இன்ஜினிலிருந்து வெளியேறிய நச்சுப் புகை காருக்குள் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எங்குச் சென்று கொண்டிருந்தனர்? என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களின் முகவரிகளைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்திலும் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நின்று கொண்டிருக்கும் காரில் ஏசியை ஆன் செய்து விட்டு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக ஜன்னல்களை முழுமையாக மூடிவிட்டுத் தூங்குவது 'கார்பன் மோனாக்சைடு' நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!