பழனியில் 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்... அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா!
தமிழகத்தின் ஆன்மிக அடையாளமாகத் திகழும் தைப்பூசத் திருவிழா இன்று உலகெங்கும் உள்ள முருகன் கோவில்களில் மிக உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை கோலாகலமாக நடைபெற உள்ளது. திண்டுக்கல், தாராபுரம், உடுமலை போன்ற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். இன்று மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அலகு குத்தியும், பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். குழந்தைகளைக் கரும்பு தொட்டிலில் ஏந்தி கிரிவலம் வரும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைக் குறைக்க 16 இடங்களில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. கடலில் புனித நீராடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருத்தணி மற்றும் சுவாமிமலையிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. தங்கக் கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காகத் தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: பழனிக்கு வரும் பக்தர்களுக்காகத் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு ஆகிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக நிலையங்கள்: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பழனியாண்டவர் கல்லூரி மற்றும் கொடைக்கானல் சாலைப் பகுதிகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையடிவாரம் மற்றும் மலைப்பாதைகளில் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மாலை நடைபெறும் தேரோட்டத்தைக் காண மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!