கார் மீது லாரி கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தில், உறவினரின் பிறந்தநாள் விழாவிற்கு மகிழ்ச்சியுடன் சென்ற ஒரு குடும்பத்தினர், எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், இன்று அதிகாலை கோடா நகரில் நடைபெற இருந்த தங்களது உறவினரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காகக் காரில் புறப்பட்டுச் சென்றனர். அதிகாலை வேளையில் சாலை வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், அவர்கள் கோடா மாவட்டம் பண்டி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, காரின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த இராட்சத லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது பயங்கரமாக மோதியதுடன், நிலைதடுமாறிக் காரின் மீதே கவிழ்ந்தது. இந்த விபத்தின் கோரத்தினால் கார் லாரியின் அடியில் சிக்கி முழுவதுமாக நசுங்கியது. காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மீட்புக்குழுவினரும், லாரியை அப்புறப்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக ஒரு நபர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அதேபோல் லாரி ஓட்டுநரும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற இடத்தில் ஒரு குடும்பமே விபத்தில் சிதைந்துள்ள சம்பவம் டோங் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!