கதறிய நண்பர்கள்... சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த மாணவர்கள் 7 பேர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக அண்டை மாநிலமான தெலுங்கானாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள கோதாவரி ஆற்றின் அழகைக் கண்டு ரசித்த மாணவர்கள், உற்சாக மிகுதியால் ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஆற்றின் நீரோட்டம் மற்றும் ஆழம் குறித்து எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி ஆற்றில் இறங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக மாணவர்கள் அனைவரும் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டதால் பெரும் பதற்றம் உருவானது.
ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற ஐந்து மாணவர்கள் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தபடியே மெல்ல மூழ்கத் தொடங்கினர். கரையில் இருந்த மற்ற இரு மாணவர்கள் அலறியடித்துக் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
இந்த கோர விபத்தில் கோகதேஜா, நவ்தீப், சதீஷ்குமார், சருகுண்ட்லா ஸ்ரீகர் மற்றும் பொடிசெட்டி அபிராம் ஆகிய ஐந்து மாணவர்களும் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாணவர்களின் உடல்களை மீட்டெடுத்துள்ளனர்.
துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய இளம் வயதினர், ஒரு சிறிய கவனக்குறைவால் ஆற்று நீரில் மூழ்கி மாண்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த மரணம் குறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!