இந்தியா முழுவதும் 700 வங்கிக்கிளைகளில் 8.5லட்சம் சைபர் குற்றவாளிகளின் போலி வங்கி கணக்குகள்... சி.பி.ஐ. அதிர்ச்சி தகவல்!
இந்தியா முழுவதும் பல வங்கிகளில் சைபர் மோசடி கும்பல் 8 லட்சத்துக்கும் அதிகமான போலி வங்கி கணக்குகளை தொடங்கி மோசடிகளில் ஈடுபட்டதாக சிபிஐ அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருக, பெருக மோசடி செய்யும் முறைகளும் மாறி வருகின்றன. வீடு தேடி வந்து திருடிய கும்பல், இப்போது ஓரிடத்தில் சொகுசாக அமர்ந்து கொண்டு, தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி, 'டிஜிட்டல்' குற்றங்களை அரங்கேற்றி வருகின்றன.
குறிப்பாக, மொபைல் போன், மடிக்கணினி இவைகளின் உதவியுடன் அரங்கேறும் பணமோசடி குற்றங்கள் சைபர் குற்றங்களாக கருதப்படுகின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக சைபர் க்ரைம் கும்பல் பணம் அனுப்ப சொல்லி பயன்படுத்தும் வங்கி கணக்குகளை ட்ரேஸ் செய்தபோது அது அடையாளம் தெரியாத நபர்களின் போலி வங்கி கணக்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டதில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் மொத்தம் 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வங்கி கணக்குகள் போலி அடையாளங்கள் மூலமாக அல்லது வேறு ஒருவரின் அடையாளச் சான்றுகளை திருடி அவருக்கே தெரியாமல் தொடங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கணக்குகள் பெரும்பாலும் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. மோசடி பணம் அந்த கணக்குக்கு வந்த சேர்ந்தவுடன், வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு அப்பணம் பிரித்து அனுப்பப்பட்டு விடுகிறது.
அதன்பிறகு, முதலில் தொடங்கிய கணக்கை மூடி விடுகின்றனர். இதனால், குற்றவாளியை பிடிப்பது சிரமம் ஆகிவிடுகிறது. இந்த முறைகேடு குறித்து சமீபத்தில் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் 42 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. இடைத்தரகர்கள், முகவர்கள், வங்கிக் கணக்குதாரர்கள், வங்கி ஊழியர்கள் என 9 பேர் சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், செல்போன்கள், வங்கிக்கணக்கு தொடக்க ஆவணங்கள், பணப்பரிமாற்ற விவரங்களும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!