"ஒரு ஒளி பிறக்கும்.. அது நம்மை வழிநடத்தும்!" - சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் அதிரடி முழக்கம்!
"சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழகம் 100 சதவீதம் உறுதியாக இருக்கும்; அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது" என்று அக்கட்சியின் தலைவர் விஜய் ஆவேசமாக முழங்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தவெக சார்பில் இன்று காலை (திங்கட்கிழமை) பிரம்மாண்டமான 'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா' நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், தனது அரசியல் நிலைப்பாட்டையும் மதச்சார்பற்ற கொள்கையையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்தார்.
மேடையில் பேசிய விஜய், "அன்பும் கருணையும் தான் எல்லாமே. தமிழ்நாடு என்பது தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எப்படி எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானோ, அப்படித்தான் நமக்கும் பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளும் ஒன்றுதான். நமது வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறாக இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள்" என்று உருக்கமாகப் பேசினார்.
அரசியல் வருகைக்குப் பிறகு தனது கடவுள் நம்பிக்கை குறித்துப் பேசிய அவர், "உண்மையான நம்பிக்கைதான் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கச் சொல்லிக் கொடுக்கும். அந்த நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக துளியும் சமரசம் செய்துகொள்ளாது. இதனால்தான் நமது கட்சியின் கொள்கைகளுக்கு 'மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்' என்று பெயர் வைத்தோம்" என்று விளக்கமளித்தார்.
இறுதியாகத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசிய அவர், "கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மைச் சரியான பாதையில் வழிநடத்தும். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று கர்ஜித்தார். தனது உரையை 'அனைத்துப் புகழும் இறைவனுக்கே' மற்றும் 'Praise the Lord' என்று கூறி முடித்த விஜய்யின் இந்தப் பேச்சு, வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு முக்கிய அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!