100 நாள் வேலைத் திட்டத்தில் பெரிய மாற்றம்... இனி 125 நாட்கள் - மாநில அரசுகளுக்கு நிதிப் பகிர்வு, வாராந்திர ஊதியம்!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGS) மத்திய அரசு அதிரடியான சீர்திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலை நாட்களை 100-ல் இருந்து 125-ஆக உயர்த்துவது, திட்டத்தின் பெயர் மாற்றம், மாநில அரசுகளுடன் ஊதியத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் வாராந்திர ஊதியம் வழங்குவது போன்ற பல்வேறு புதிய மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் மூலம் திட்டத்தில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், அண்மைக் காலமாகப் பணியாளர்களுக்குச் சராசரியாக 50 நாட்களே வேலை வழங்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு 41 லட்சம் குடும்பங்கள் 100 நாட்கள் முழுமையாகப் பணியாற்றிய நிலையில், இந்தாண்டு அது 7 லட்சமாகக் குறைந்துள்ளது. 125 நாட்கள் வேலை: தற்போது அதிகபட்சமாக 100 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் நிலையில், மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மசோதா, மொத்த வேலை நாட்களை 125-ஆக உயர்த்த வழிவகை செய்கிறது.
இந்தத் திட்டத்தின் பெயரை 'பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பழைய நடைமுறையின்படி, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியச் செலவு முழுவதையும் மத்திய அரசே வழங்கி வந்தது. ஆனால், வரவிருக்கும் புதிய மசோதா இந்த ஊதியச் செலவைப் பகிர்ந்துகொள்வதில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
வடகிழக்கு மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் குறிப்பிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான ஊதியச் செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். எஞ்சிய 10 சதவீதத்தை அந்தந்த மாநிலங்கள் வழங்கினால் போதும். மற்ற மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இந்த நிதிப் பகிர்வு 60:40 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்கும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்கும்.
தற்போதுள்ள நடைமுறையில் 15 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்தக் கால அவகாசத்தைக் குறைக்கும் வகையில், புதிய மசோதா பணியாளர்களின் நலன் கருதி வார அடிப்படையில் ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு, ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளது:
விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில், அதாவது அதிகபட்சமாக 60 நாட்களுக்கு, இந்த 125 நாள் வேலைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இந்த 60 நாட்கள் எந்தக் குறிப்பிட்டக் கால இடைவெளி என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில் எந்தப் புதிய திட்டமும் தொடங்கப்படாது, முன்னரே தொடங்கப்பட்ட திட்டங்களும் தொடரப்படாது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!