ஆம் ஆத்மி மேடையில் காலணி வீச்சு… கூட்டத்தில் சலசலப்பு!
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று (டிச.5) நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விசாவதர் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சியின் மூத்த தலைவருமான கோபால் இத்தாலியா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் எழுந்து அவர் மீது காலணியை வீசி தாக்க முயன்றார். இந்த எதிர்பாராத சம்பவம் மேடையிலும் கூட்டத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலை கிளப்பியுள்ளது.
காலணி வீசிய நபரை உடனடியாக ஆம் ஆத்மி கட்சியினர் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படும் காட்சிகளும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காலணி வீசியவர் சத்ரபால்சிங் ஜடேஜா என அடையாளம் காணப்பட்ட நிலையில், தாக்குதலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோபால் இத்தாலியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குஜராத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. இது பாஜகவின் தூண்டுதலால் நடைபெற்ற ஒன்றே; ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை தடுக்க இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்று குற்றம்சாட்டினார். இதே விவகாரத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ‘ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி பாஜக மற்றும் காங்கிரஸை அச்சுறுத்துகிறது’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!