நடிகை கனகாவின் தந்தை, இயக்குநர் தேவதாஸ் காலமானார்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துப் புகழ் பெற்ற நடிகை தேவிகாவின் கணவரும், நடிகை கனகாவின் தந்தையுமான இயக்குநர் தேவதாஸ் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 150 படங்களுக்கு மேல் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை தேவிகா. இவருடைய மகள்தான் நடிகை கனகா. 1989ல் கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'அதிசய பிறவி' உட்படத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தேவிகா, 1990-ம் ஆண்டு தனது கணவரான இயக்குநர் தேவதாஸைப் பிரிந்து, மகள் கனகாவுடன் தனியாக வசித்து வந்தார். நடிகை தேவிகா 2002-ம் ஆண்டு மரணமடைந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் உணர்ந்த கனகா, தந்தை தேவதாஸ் உடனான பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட பல காரணங்களால் வெளியில் வராமல் தனிமையில் வசித்து வந்தார்.
கனகாவின் சமீபத்திய தோற்றம் ஆளே அடையாளம் தெரியாதபடி பருமனாக இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு நடிகை குட்டி பத்மினி அவரை நேரில் சந்தித்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருந்த தேவதாஸ், தனது திருமண வாழ்க்கை மற்றும் மகள் கனகாவுடனான உறவு குறித்துப் பேசினார்: "நான் என் மனைவியைக் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தேவிகா என்னை வேலைக்காரனைப் போல் வைத்திருந்தார். அதனால், கனகா பிறந்த மூன்றாவது ஆண்டில் நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்களுக்குள் சட்டப்பூர்வமான விவாகரத்து நடைபெறவில்லை."
"கனகா 17 வயதில் நடிக்க வந்தார். அவர் படிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், கனகாவுக்கு நடிப்பு மீதுதான் ஆர்வம் இருந்ததால், அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவர் நடித்த படங்களை நான் இதுவரை பார்த்ததில்லை."
"எனக்கு இப்போது 88 வயதாகிறது. கனகா இப்போது வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை கனகாவின் எஞ்சியிருந்த ஒரே உறவான அவரது தந்தை தேவதாஸ் காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!