நடிகை பாலியல் வழக்கு... நடிகர் திலீப்பின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
மலையாளத் திரையுலகையே உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப்பிற்கு, தற்போது மற்றொரு முக்கிய நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவரது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) மீண்டும் அவரிடமே ஒப்படைக்குமாறு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் திலீப் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய இருந்த சட்டத் தடைகள் விலகியுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சர்ச்சைக்குரிய வழக்கில், திலீப் எட்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு 85 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர், தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரை நீதிமன்றம் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்தது. தீர்ப்பு வெளியான அன்றே தனது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தருமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இந்த விடுதலையை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட தரப்பில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், பாஸ்போர்ட்டைத் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஆனால், தனது புதிய திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காகவும், படப்பிடிப்பிற்காகவும் உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகத் திலீப் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவர் விடுதலையாகிவிட்ட நிலையில் பாஸ்போர்ட்டைத் தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி அதனைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு திலீப் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!