நடிகை பாலியல் வழக்கு: "என்னை வாழ விடுங்கள்" - திலீப் விடுதலையான நிலையில் நடிகையின் உருக்கமான பதிவு!
மலையாளத் திரையுலகையே உலுக்கிய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப் உள்ளிட்டோர் விடுதலையானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், எர்ணாகுளம் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதில் திலீப் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என அவர் விடுவிக்கப்பட்டார். அதே சமயம், பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு நடிகை குறித்துப் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த நிலையில், அவர் தனது மௌனத்தை உடைத்துள்ளார்.
தனது பதிவில் மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ள அந்த நடிகை, "எனக்கு எதிராகப் பாலியல் குற்றம் நடந்த பிறகு, நான் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துச் சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றதே மிகப்பெரிய தவறோ என்று இப்போது நினைக்கிறேன். நான் அன்று அமைதியாக இருந்திருக்க வேண்டும்; யாரிடமும் எதுவும் சொல்லியிருக்கக் கூடாது. அன்று நடந்ததெல்லாம் 'விதி' என்று கடந்து போயிருக்க வேண்டும். ஒருவேளை அந்த வீடியோ வெளியான பிறகு, புகார் அளிக்காத என்னிடம் சமூகம் கேள்வி கேட்டிருந்தால், அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். அதைத்தான் இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வக்கிரமான தகவல்களைப் பரப்புபவர்களைச் சாடிய அவர், "பாதிக்கப்பட்ட பெண்ணாக அல்லாமல் ஒரு சாதாரண மனிதனாகக் கேட்கிறேன், என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். இது போன்ற வக்கிரங்களைப் பேசுபவர்களுக்கும், பரப்புபவர்களுக்கும், உங்கள் வீட்டினருக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டுகிறேன்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். நீதிக்காக எட்டு ஆண்டுகளாகப் போராடியும், தீர்ப்பிற்குப் பிறகு தன்னை நோக்கி வீசப்படும் அவதூறுகளால் தான் சிதைக்கப்படுவதை அவர் இந்தப் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நடிகையின் இந்தப் பதிவு திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!