முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் நிதிஷ்குமார்!
பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார், தனது புதிய பதவிக்காலத்தின் முதல் பயணமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற நிதிஷ்குமார், பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து பீகார் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, மாநிலத்திற்குத் தேவையான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, புதிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். பீகார் அமைச்சரவையை விரிவுபடுத்துவது குறித்தும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான முக்கியப் பொறுப்புகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பீகாரில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் (MP) இடங்களுக்கான வேட்பாளர் தேர்வு குறித்தும் தலைவர்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 27 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நிதிஷ்குமார் நேற்று மாலை பாட்னா திரும்பினார். இந்தச் சந்திப்பு பீகார் அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!