எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி... நாடு முழுவதும் மாணவர்களிடையே 13 வயதிலேயே போதை கலாசாரம் அதிகரிப்பு!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் பள்ளி மாணவர்களின் போதைப்பழக்கம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய விரிவான ஆய்வில் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் சராசரியாக 12.9 வயதிலேயே (சுமார் 13 வயதில்) மது மற்றும் போதைப் பொருட்களுக்குப் பழக்கப்பட்டு அறிமுகமாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, லக்னோ, மும்பை, சண்டிகர், சென்னை உள்ளிட்ட நாட்டின் 10 முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 6,000 பள்ளி மாணவர்களிடம் இந்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தற்போது தேசிய மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பசை (Glue), பெயிண்ட் மற்றும் பெட்ரோல் போன்ற வாசனையை நுகரும் அபாயகரமான போதைப் பழக்கமானது மாணவர்களிடையே 11 வயதிலேயே தொடங்கி விடுகிறது என்பது ஆய்வாளர்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 15.1 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. புகையிலை மற்றும் மதுபானத்தைத் தவிர்த்து, அபின் மற்றும் கஞ்சா போன்றவையும் மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. போதைப்பழக்கத்தின் பயன்பாடு, மாணவர்களின் வகுப்பு படிநிலை ஏற ஏற அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 8ம் வகுப்பு மாணவர்களை ஒப்பிடும்போது, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் புகையிலை மற்றும் மதுபானம் மிக எளிதாகக் கிடைக்கிறது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து ஆய்வாளர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். போதைப்பழக்கத்தின் அறிமுகம் மிகச் சிறிய வயதிலேயே தொடங்கிவிடுவதால், விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆரம்பப்பள்ளி நிலையிலேயே போதைப்பழக்கம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!