திமுக அரசுக்கு இறுதி எச்சரிக்கை... ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஒன்று சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தற்போது போராட்டத்தின் உச்சகட்ட முடிவை அறிவித்துள்ளனர். அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'போட்டோ ஜியோ' (FOTO GIO) சார்பில், வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை அந்த அமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார், இது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய அமிர்தகுமார், "தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என உறுதியளித்தார். ஆனால், பதவிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றும், இதுவரை எவ்விதப் பலனும் இல்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே அரசு ஊழியர்களின் 70 சதவீதப் பிரச்சினைகள் தீரும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தேர்தல் வாக்குறுதி அளிக்காமலேயே ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில், வாக்குறுதி அளித்த தமிழக அரசு மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின் இந்த மெத்தனப் போக்கால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இனிப் பொறுக்க முடியாது என்பதால் இறுதி கட்டப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு முன்னோட்டமாக, வரும் டிசம்பர் 29ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 6 முதல் தொடங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் முன், ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!