தீராத ஆத்திரம்... 17 முறை மனைவியைக் கத்தியால் குத்தி கொன்ற கணவன் - இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில், தனது மனைவியை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகக் குத்திக் கொன்ற கணவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலை பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). இவர் கேரள அரசுப் படகு போக்குவரத்துத் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்பிளி (27), அந்தப் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் பணம் வசூல் செய்யும் முகவராகப் பணிபுரிந்து வந்தார். மனைவியின் நடத்தையில் ராஜேஷுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, அம்பிளி தனது வசூல் பணத்தை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது, ராஜேஷ் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார். பின்னர் மனைவியிடம் இருந்த வசூல் பணத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். பலத்த காயமடைந்த அம்பிளியை மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அம்பிளியின் மார்பு உட்பட உடலின் 17 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேர்த்தலை போலீசார் ராஜேஷைக் கைது செய்தனர். இந்த வழக்கு ஆலப்புழை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
ராஜேஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ₹2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண் நடுரோட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!