இந்தியாவுக்கு இன்னொரு உலக கோப்பை... ஒரு தோல்வியும் இன்றி இமாலய சாதனை படைத்த இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி!
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பெருமைமிகு மற்றொரு உலகக்கோப்பை வெற்றி சேர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற கண்பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் நேபாள அணியால் ரன் குவிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. 115 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. வெறும் 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. இன்னும் 47 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் குலா ஷரீர் ஆவார். இவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய மகளிர் கண்பார்வையற்றோர் அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. லீக் சுற்றுகள் முதல் இறுதிப் போட்டி வரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல், அசைக்க முடியாத அணியாக வலம் வந்து, முதல் உலக சாம்பியன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
முன்னதாக இந்திய அணி லீக் சுற்றுகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளையும் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதோடு, அரையிறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நவி மும்பையில் நடந்த மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்த நிலையில், மூன்று வாரங்களுக்குள்ளாகவே கண்பார்வையற்றோர் அணியும் உலகக் கோப்பையை வென்றிருப்பது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் உச்சமாக அமைந்துள்ளது.
கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டிற்கு இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இந்த விளையாட்டுக்குக் கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!