இதக் கூட விட்டு வைக்கலயா?... 2,000 ராணி எறும்புகளை டெஸ்ட் ட்யூபில் வைத்துக் கடத்திய வினோத கும்பல்!
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள ராணி எறும்புகளைச் சீனாவிற்குக் கடத்த முயன்ற சீன நாட்டவர் ஜாங் கெகுன் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விமான நிலைய பாதுகாப்புச் சோதனையின் போது, இவரது உடைமைகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் வினோதமான முறையில் டெஸ்ட் டியூப்கள் மற்றும் டிஷ்யூ பேப்பர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எறும்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் 1,948 ராணி எறும்புகள் பிரத்யேக டெஸ்ட் டியூப்களிலும், மேலும் 300 எறும்புகள் டிஷ்யூ ரோல்களிலும் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்தன.
இந்த எறும்புகள் 'ஜெயண்ட் ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர்' வகையைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க மண்ணின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இந்த எறும்புகள் மிகவும் முக்கியமானவை என்பதால், இவற்றை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு கடும் தடை விதித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் 'எக்ஸோடிக் பெட்ஸ்' வளர்ப்பவர்கள் மத்தியில் இந்த ராணி எறும்புகளுக்கு மிகப்பெரிய மும்முனைப் போட்டி நிலவுவதால், இவற்றை ஒரு ராணி எறும்புக்கு 100 முதல் 200 யூரோ வரை (இந்திய மதிப்பில் பல ஆயிரங்கள்) விற்பனை செய்யக் கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
கைது செய்யப்பட்டுள்ள ஜாங், கடந்த ஆண்டே எறும்பு கடத்தல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர் என்பதும், போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவருடன் இணைந்து எறும்புகளைச் சப்ளை செய்த சார்லஸ் முவாங்கி என்ற கென்ய நாட்டவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற கடத்தல் சம்பவத்தில் பெல்ஜியம் மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைதான நிலையில், தற்போது பெரிய அளவிலான கடத்தல் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. "யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்புகளைத் தாண்டி இப்போது எறும்புகள் மீதும் கடத்தல்காரர்களின் பார்வை விழுந்திருப்பது கவலையளிக்கிறது" என கென்ய வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!