உடல் எடையைக் குறைக்க 3 மருந்துகளுக்கு அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மூன்று முக்கிய மருந்துகளைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக 'செமகுளுடைடு' (Semaglutide) உள்ளிட்ட GLP-1 ரக மருந்துகள் மற்றும் 'டிரிசெபாடைடு' (Tirzepatide) போன்ற மருந்துகள் நீரிழிவு மற்றும் உடல் எடை மேலாண்மைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் உடலில் பசியைக் கட்டுப்படுத்தி, செரிமான வேகத்தைக் குறைப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகின்றன.
அதே சமயம், இந்த மருந்துகள் குறித்து பொதுமக்களிடையே தவறான புரிதல் ஏற்படுவதைத் தடுக்கவும், தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் CDSCO புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருந்து நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் இந்த மருந்துகள் குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, "உறுதியான எடை குறைப்பு" (Guaranteed weight loss) போன்ற மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்வது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றப் பிரச்சனை என்பதால், மருந்துகளை மட்டுமே நம்பியிருக்காமல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் அவசியம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த மருந்துகளைத் தகுதியான மருத்துவர்களின் (Registered Medical Practitioners) பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால், மருந்தகங்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!