"நேருக்கு நேர் மேடையேற தயாரா? ஓபன் சேலஞ்ச் பீலா தேவையா?" - எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்விகள்!
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கும் வகையில், "நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையான அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக ஈ.பி.எஸ் கூறியதற்குப் பதிலளித்த அமைச்சர், "2015 சென்னை வெள்ளத்தின் போது தன்னார்வலர்கள் தந்த நிவாரணப் பொருட்களில் கூட ஜெயலலிதா படத்தை ஸ்டிக்கராக ஒட்டியவர்கள்தான் நீங்கள். பட்ஜெட் சூட்கேஸ் முதல் மணமக்கள் வரை ஸ்டிக்கர் ஒட்டி தமிழகத்தின் மானத்தை வாங்கியவர்களுக்கு எப்போதும் ஸ்டிக்கர் நினைப்புதான் இருக்கும்" எனச் சாடினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியது குறித்த பழனிசாமியின் பேச்சுக்கு, "மாவட்டத்தை உருவாக்கிவிட்டு, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக ஆட்சியர் அலுவலகத்தை வைத்துவிட்டுப் போனீர்கள். திமுக அரசு வந்த பிறகுதான் 2024 செப்டம்பரில் புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை முதலமைச்சர் திறந்து வைத்தது ஏன் உங்களுக்கு எரிகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியின் சிறப்பான நிர்வாகம் எனக் கூறியதற்குப் பதிலடியாக ஒரு நீண்ட பட்டியலை அமைச்சர் ரகுபதி அடுக்கினார்: "பரமக்குடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலைகள், கூவத்தூர் கூத்துகள், சாத்தான்குளம் இரட்டை மரணம், நிர்மலா தேவி விவகாரம் எனச் சந்தி சிரித்ததெல்லாம் யாருடைய ஆட்சியில்? இன்னும் பட்டியல் போட்டால் நீங்கள் மூச்சு இரைக்க வாசிக்க வேண்டியிருக்கும்."
20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து, "ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் முடக்கவில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில் 2019-க்குப் பிறகு அந்தத் திட்டத்தையே முடக்கிவிட்டீர்கள். இப்போது நாங்கள் செயல்படுத்தும்போது உங்களுக்கு அடிவயிறு ஏன் எரிகிறது?" என வினவினார்.
இறுதியாக ஈ.பி.எஸ்-ன் 'நேருக்கு நேர்' சவாலுக்கு அமைச்சர், "இதற்கு எதற்குத் தனியாக மேடை போட வேண்டும்? சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் பேசலாமே. அங்கே முதலமைச்சர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், வெளிநடப்பு செய்து புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு, 'Open Challenge' என்ற பீலா தேவையா?" எனக் காரசாரமாகத் தனது அறிக்கையை முடித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!