கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி... பிரபல நடிகையும், காங்கிரஸ் பிரமுகரும் கைது!

 

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சிப் பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், முக்கிய குற்றவாளி தப்பிச் செல்ல உதவிய நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான சவிதா மல்லேஷ் நாயக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் 10ம் தேதி, தாவணகெரே டவுன் பாஷா நகர் பகுதியில் வைத்து ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பிரமுகரான அஸ்கர் என்பவரைக் கூலிப்படையினர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆஜாத்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்தக் கொலை முயற்சிக்குப் பின்னணியில் இருந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான காலித் பயில்வான் என்பது தெரியவந்தது. காலித் பயில்வானுக்கும் அஸ்கருக்கும் இடையே இருந்த முன்விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனப் போலீசார் கண்டறிந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த காலித் பயில்வானைத் தேடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அப்போது, காலித் பயில்வான் பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல இடங்களுக்குத் தப்பிச் செல்ல நடிகை சவிதா மல்லேஷ் நாயக் உதவி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. அவர் தலைமறைவாக இருக்கப் பணமும் அடைக்கலமும் தந்து உதவியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

நடிகையும் மாடல் அழகியுமான சவிதா மல்லேஷ் நாயக், இதற்கு முன் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்தவர் ஆவார். அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தபோது மாயகொண்டா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது காங்கிரஸ் சார்பிலும் அதே தொகுதியில் போட்டியிட காய்களை நகர்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூருவில் பதுங்கி இருந்த சவிதா மல்லேஷ் நாயக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காலித் பயில்வானை போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஜனதா தளம்(எஸ்) பிரமுகரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், காங்கிரஸ் பெண் பிரமுகரும் நடிகையுமான ஒருவர் கைதாகியிருப்பது தாவணகெரே அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!