சென்னையில் மரம் விழுந்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு... ரூ.1 கோடி இழப்பீடு வழங்க பாஜக வலியுறுத்தல்!
சென்னை அயனாவரத்தில் ஆட்டோ மீது பனை மரம் விழுந்து உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக, மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நேற்று நவம்பர் 22ம் தேதி சென்னை அயனாவரம், மேடவாக்கம் குளக்கரை சாலை - அயனாவரம் சாலை சந்திப்பில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ மீது ஒரு பனை மரம் விழுந்தது. இந்த விபத்தில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. விழுந்த மரம் சென்னை அயனாவரம் மன நல மருத்துவமனை வளாகத்தின் உள்ளே இருந்து சாலை வரை பரவியிருந்தது. அந்த மரம் கரையானால் அரிக்கப்பட்டு, வலுவிழந்த நிலையில் முறிந்து விழுந்து ஒரு உயிரைப் பலி வாங்கியுள்ளது. கரையானால் அரிக்கப்பட்ட மரத்தை அகற்றாமல், அதன் ஆரோக்கியத்தைப் பேணாமல் அலட்சியமாக இருந்தது மனநல மருத்துவமனை நிர்வாகத்தின் பெரும் குற்றமாகும்.
மருத்துவமனை நிர்வாகி மீது நடவடிக்கை: அலட்சியத்திற்குப் பொறுப்பான மருத்துவமனையின் உரிய அதிகாரி மீது இந்திய தண்டனை குற்றவியல் சட்டம் 304A-வின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாநகராட்சிப் பொறுப்பு: சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களின் வலுவை மேற்பார்வையிட வேண்டிய கடமை சென்னை மாநகராட்சிக்கு உள்ளது. சாலையில் பரவியிருந்த இந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது பணி அலட்சியமே. மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு: தொடர்புடைய மாநகராட்சி அதிகாரிகள் மீதும் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இழப்பீடு மற்றும் அரசு வேலை: ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித் குடும்பத்திற்கு உடனடியாக ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சென்னை மாநகராட்சியில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த மரணத்தை விபத்து என்று கடந்து செல்லாமல், உரிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என்றும், அது அரசு அதிகாரிகளுக்குப் பெரும் பாடமாக அமையும் என்றும் பாஜக தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!