கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் உறுதி - ஆலப்புழா, கோட்டயம் மாவட்ட மக்கள் பீதி!
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கும் வேளையில், இந்த அறிவிப்பு பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக கோழிப்பண்ணைகளில் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்தனர். இவை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு (NIHSAD) அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சோதனையின் முடிவில், பறவைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில கால்நடைத் துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பின்வரும் பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் நெடுமுடி, செருதனா, கருவட்டா, கார்திகபள்ளி, அம்பலபுழா தெற்கு, புன்னப்ரா தெற்கு, தகழி மற்றும் புறக்காடு. கோட்டயம் மாவட்டத்தில் குருப்பந்தரா, கல்லுபுரயக்கல் மற்றும் வெல்லூர் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டாலும், தற்போது வரை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்படவில்லை. கால்நடைத் துறை அதிகாரிகள் தற்போது நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். பாதிப்பின் தீவிரம் அதிகரித்தால் மட்டுமே, கோழிகளை அழிப்பது (Culling) மற்றும் விற்பனைக்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிப்புக்குள்ளாகும் பண்ணையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மூலமாகவே கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டும் இதேபோல் கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலத்தில் விற்பனை மந்தமாகலாம் என்ற அச்சத்தில் பண்ணையாளர்கள் இருந்தாலும், சுகாதாரத் துறையினர் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!