உஷார்... ரூ.500 கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில், ரூ.500 மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து, கட்டுக்கட்டாக இருந்த போலி நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்த கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (28) என்பவர், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடை வியாபாரியிடம் 500 ரூபாய் போலி நோட்டைக் கொடுத்துச் சில்லறை கேட்டுள்ளார். அந்த நோட்டின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் அடைந்த வியாபாரி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணன் வைத்திருந்தது குழந்தைகள் விளையாடுவதற்காகக் கடைகளில் விற்கப்படும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.
மேலும், சரவணன் பணியாற்றும் உணவகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது, கட்டுக்கட்டாக இருந்த சுமார் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான போலியான 500 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, சரவணன் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சர்மா (45) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!