உஷார்... மேட்ரிமோனியல் மோசடி... 'பெண் குரலில்' பேசி இளைஞரிடம் ₹17 லட்சம் மோசடி!
திருமணத் தகவல் மையத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்த இளைஞரிடம், பெண் குரலில் பேசி ஆசைவார்த்தை கூறி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வைத்து ரூ. 17 லட்சம் மோசடி செய்த நபரை அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (30). இவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக, பெற்றோர் இவருடைய விவரங்களைத் தனியார் திருமணத் தகவல் மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். இந்தப் பதிவைப் பார்த்து, வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண் பார்த்திபனைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்தப் பெண், "ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய பார்த்திபன், பல்வேறு தவணைகளாக அந்தப் பெண்ணிடம் மொத்தம் ரூ.17 லட்சம் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், அந்தப் பெண் உறுதியளித்தபடி பார்த்திபனுக்குப் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதற்கிடையே, அந்தப் பெண் பார்த்திபனுடன் பேசுவதையும் திடீரென நிறுத்திக்கொண்டார். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பார்த்திபன், அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெண் போல் பேசி பார்த்திபனிடம் இந்த மோசடியைச் செய்தவர், கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை கல்குளத்தைச் சேர்ந்த அசார் (36) என்ற ஆண் என்பது உறுதியானது. இதையடுத்து அசாரை அதிரடியாகக் கைது செய்த சைபர் கிரைம் போலீசார், அவரைக் கோர்ட்டில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடியில் அசாருக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!