உஷார்.. இந்த 205 மருந்துகள் தரம் குறைந்தவை... மத்திய அரசு எச்சரிக்கை!
நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான 205 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, இரண்டு மருந்துகள் முற்றிலும் போலியானவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து ஒவ்வொரு மாதமும் சந்தையில் உள்ள மருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் முக்கியமான சில மருந்துகளே தரக் கட்டுப்பாட்டில் தோற்றுப் போயிருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தரமற்ற மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாகப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், சுகாதாரத் துறை இந்த விவகாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. அவர்களின் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த மருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வது மற்றும் உற்பத்தியைத் தடை செய்வது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. போலியாகக் கண்டறியப்பட்ட இரண்டு மருந்துகள் எங்கிருந்து சந்தைக்கு வந்தன என்பது குறித்துப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய நிறுவனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமக்கள் எப்படித் தெரிந்துகொள்வது?
தரம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த 205 மருந்துகளின் பட்டியல் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cdsco.gov.in என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மருந்துகளை வாங்கும் முன்போ அல்லது பயன்படுத்தும் முன்போ அந்தப் பட்டியலில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கும் போது அதன் காலாவதி தேதியுடன் சேர்த்து, அரசு எச்சரித்துள்ள தரமற்ற மருந்துகளின் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ளனவா என்பதையும் விழிப்புணர்வுடன் கவனிப்பது அவசியமாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!