undefined

160 ரயில்கள் ரத்து.. 45 நாட்களுக்கு அட்டவணை மாற்றம்... சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க!

 

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கான மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, அடுத்த 45 நாட்களுக்குப் புறநகர் ரயில் சேவைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, பிப்ரவரி 20-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு வரை புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது.

வழக்கமாக இயக்கப்படும் 324 மின்சார ரயில் சேவைகளில், சுமார் 160 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதுள்ள ரயில் எண்கள் மற்றும் நேரங்கள் மாற்றப்பட்டு, புதிய எண்களுடன் 164 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளன. இதில் 84 ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்தும், 80 ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக நடைமேடைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம்: தாம்பரம், காஞ்சிபுரம், அரக்கோணம் நோக்கிச் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும். அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டிலிருந்து வரும் ரயில்கள் எழும்பூர் 5-வது நடைமேடைக்கு வந்து செல்லும்.

இந்த 45 நாட்களுக்குச் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமைக்கான பிரத்யேக நேர அட்டவணை பின்பற்றப்படாது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதிய திருத்தப்பட்ட கால அட்டவணையின்படியே ரயில்கள் இயங்கும். மின்சார ரயில்களின் நடைமேடை மாற்றத்தால், ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தற்காலிகமாகத் தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும். ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு (MTC) ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தகவல்களையும் மேலாளர் சைலேந்திர சிங் பகிர்ந்துள்ளார். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிக்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்தில் இந்த ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. பறக்கும் ரயில் சேவையின் பாதுகாப்பு சோதனைகள் மார்ச் இறுதியில் நடைபெற்று, அதன்பின் சேவைகள் தொடங்கும்.

சென்னை மின்சார ரயில்களில் எதிர்காலத்தில் தானியங்கி கதவுகள் பொருத்தும் திட்டம் உள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்களுடைய பயணத்தைத் திட்டமிடும் முன் திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!