போதைப் பொருள் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் கைது!
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தொடர்புடைய வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பாடியை சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்பவரை பிடித்து விசாரித்தபோது, எல்.எஸ்.டி ஸ்டாம்பு வடிவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடமிருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விசாரணையின் அடிப்படையில் தேனாம்பேட்டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்பாளர் முகமது மஸ்தான் சர்புதீன் (44), முகப்பேரை சேர்ந்த சீனிவாசன் (25), வளசரவாக்கத்தை சேர்ந்த சரத் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27.91 லட்சம் ரொக்கம் மற்றும் ஓஜி என்ற உயர் ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பிரபலங்கள் மற்றும் மாடலிங் துறையினருக்கு போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டதா என போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
காவல் விசாரணையின் போது இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலின் பேரில், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் (39) கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிப்பில் உருவாகும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இவர் இருப்பதாக கூறப்படுகிறது. தினேஷ் ராஜ் மற்றும் சர்புதீன் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், சினிமா வட்டாரத்தில் வேறு யாருக்காவது போதைப் பொருள் வழங்கப்பட்டதா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!