விளைநிலங்களை மதுபாட்டில்களால் நிரப்பும் குடிமகன்கள்... விவசாயிகள் கொந்தளிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டூர் செட்டியூர் கிராமத்தில், விளைநிலங்களுக்கு நடுவே செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் குமுறி வருகின்றனர். மதுப்பிரியர்களின் அட்டகாசம் தாங்காமல், "இந்த கடையை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்" என அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளது.
மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை விவசாய நிலங்களில் உடைத்து எறிவது, பிளாஸ்டிக் கழிவுகளை வயல்களில் கொட்டுவது என மதுப்பிரியர்களின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. இதனால் நிலத்தின் தரம் பாதிக்கப்படுவதோடு, வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் கால்களைக் கண்ணாடித் துண்டுகள் பதம் பார்ப்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், பாரூர் பெரிய ஏரியிலிருந்து வரும் பாசனக் கால்வாயிலும் பாட்டில்களை வீசுவதால் நீரோட்டம் தடைபட்டு, விவசாய நீர் மாசுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதில் உச்சக்கட்டமாக, அருகிலுள்ள தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து, மரங்களில் உள்ள இளநீரைப் பறித்து மதுவுடன் கலந்து குடிக்கும் 'நவீன' குடிமகன்களால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை எச்சரிக்கை பலகை வைத்தும் எதற்கும் அஞ்சாத இந்த கும்பலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. "உடனடியாகக் கடையை அகற்றாவிட்டால், விவசாயிகளைத் திரட்டிப் பெரும் போராட்டம் நடத்தப்படும்" என விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளதால் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!