இன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்... மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்கப் போவது யாரு?!
மராட்டிய உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், சுமார் நான்கு ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நேற்று ஜனவரி 15ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அதிக நிதிநிலை கொண்ட மும்பை மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நேற்று காலை 7:30 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5:30 மணிக்கு நிறைவடைந்தது. மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த சராசரி வாக்குப்பதிவு சுமார் 48% முதல் 52% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மும்பையில் மாலை 3:30 மணி நிலவரப்படி 41.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதி நிலவரப்படி இது 46.8% ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகப் புனேவில் 51.2% வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற நகரங்களை விட மாலேகானில் வாக்குப்பதிவு வேகம் அதிகமாக இருந்தது, அங்கு இறுதி நிலவரம் 52.2% ஆக உள்ளது. தானே (46.5%), நாக்பூர் (45.3%) மற்றும் நாசிக் (46.4%) ஆகிய மாநகராட்சிகளில் சுமாரான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது.
இந்தத் தேர்தல் ஒரு மினி சட்டமன்றத் தேர்தல் போலவே பார்க்கப்படுகிறது. ஆளும் 'மஹாயுதி' கூட்டணி (பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி) தனது செல்வாக்கை நிரூபிக்கப் போராடுகிறது.
மறுபுறம் 'மகா விகாஸ் அகாடி' (உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் என்சிபி, காங்கிரஸ்) இழந்த இடங்களை மீட்கத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய தாக்கரே சகோதரர்கள் மராத்தி வாக்குகளைக் கவர இணைந்து களம் இறங்கியது இந்தத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில சர்ச்சைகளும் வெடித்தன. வாக்களித்த பின் விரலில் வைக்கப்படும் 'அழியாத மை', மார்க்கர் பென் மூலம் அழிப்பதைப் போல எளிதாக அழிந்து விடுவதாக உத்தவ் தாக்கரே மற்றும் பிற தலைவர்கள் குற்றம் சாட்டினர். இது கள்ள ஓட்டுப் போட வழிவகுக்கும் என அவர்கள் புகார் அளித்தனர்.
புனே மற்றும் நாசிக் பகுதிகளில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!