ஜன.3ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை... சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்.. ஏற்பாடுகள் தீவிரம்!
கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாத ஆனித்திருமஞ்சனமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா, இன்று (டிசம்பர் 25, 2025) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அடுத்த பத்து நாட்களுக்குத் தினமும் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3-ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காகவும், விழாவின் முக்கியத்துவத்தைக் கருதியும் ஜனவரி 3-ம் தேதி கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவசரத் தேவைகளுக்காக அரசு கருவூலங்கள் மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!