undefined

உருவானது 'சென்யார் புயல்'... 2 புயல் சின்னங்கள்... தமிழகத்துக்குப் பாதிப்பா?

 

அந்தமான் கடற்பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய பெயரான 'சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மற்றொரு தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால், தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்திப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து, இந்தோனேசியாவில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது வடக்கு சுமத்ரா பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

சென்யார் புயல் தற்போது தமிழகத்திலிருந்து சுமார் 2,600 கி.மீ தொலைவில் உள்ளதால், இந்த புயலால் தமிழ்நாட்டிற்குப் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெளிவாக அறிவித்துள்ளது. 'சென்யார்' புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றாலும், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவது தமிழகத்திற்கு மழை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த அமைப்பின் காரணமாக இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று (நவம்பர் 26) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, 'சென்யார்' புயலால் அச்சம் இல்லை என்றாலும், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் தாழ்வு மண்டலத்தின் நகர்வைக் கருத்தில் கொண்டு டெல்டா மற்றும் கடலோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!