டித்வா புயல்... கடல் கொந்தளிப்பு... கடற்கரைக்கு செல்லத் தடை... துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்!
வங்கக் கடலில் 'டித்வா' புயல் உருவாகி வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடலூா் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல், புதுச்சேரி துறைமுகப் பகுதியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது, புயல் உருவாகியுள்ளது என்பதையும், புயலால் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் உணர்த்துகிறது.
இந்திய தேசியப் பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) மூலமாக உயா் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை, நவ. 28) இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை கடலில் அலைகள் 2.7 முதல் 3.3 மீட்டா் உயரம் வரை எழும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதற்கான எச்சரிக்கையாகும். அத்துடன், இந்தியப் பெருங்கடல் சுமத்ரா தீவில் 6.5 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் பதிவான தகவலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், புயலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன: மீனவர்கள் மற்றும் கடலோரத்தில் குடியிருப்போா் உட்பட யாரும் கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகள் மற்றும் என்ஜின் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைச் பாதுகாப்பான இடங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாகக் குழுக்கள் இந்த எச்சரிக்கை தகவலை அனைத்து மீனவர்களுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!