'டிட்வா’ புயல் எச்சரிக்கை... இன்று கனமழையால் 54 விமானங்கள் ரத்து!
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் 'டிட்வா' புயலின் காரணமாக, பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் விளைவாக, இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய 54 விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து ரத்து: தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்குச் சென்னையில் இருந்து இயக்கப்பட இருந்த 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தூத்துக்குடி, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலிருந்து சென்னைக்கு வரவிருந்த 16 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களிலிருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட இருந்த 22 விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக, சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலின் நகர்வைச் சார்ந்து, ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். எனப்படும் சிறிய ரக விமானங்கள் அனைத்தும் இன்று காலை முதல் இரவு வரையில், தங்களது இயக்கங்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, பயணிகள் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், சென்னை விமான நிலைய அதிகாரிகள் முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர். விமானத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களுடன் முன்கூட்டியே தொடர்பு கொண்டு, தங்களது விமானத்தின் நிலை குறித்துத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு தங்கள் பயணங்களை மாற்றியமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!